சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் லட்சுமி நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். பி.எஸ்.சி பட்டதாரியான லட்சுமி நாராயணனுக்கு வேலை கிடைக்கவில்லை. இவர் பாலாஜி என்டர் பிரைசஸ், எஸ்.எல்.என் என்டர்பிரைசஸ் என்ற பெயர்களில் இரண்டு நிறுவனங்களை தொடங்கி பிரபல வணிக கம்பெனிகள் என்று விளம்பரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டியும், லாப பங்கு தொகையும் தரப்படும் என அறிவித்துள்ளார். மேலும் வங்கிகளில் கடன் வாங்கி தருவதாகவும், அந்த பணத்தை எனது நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள் எனவும் ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனை நம்பி வருபவர்களின் ஆதார் கார்டு, பான் கார்டு, வேலை செய்பவராக இருந்தால் அவர்களது சம்பள பட்டியல், சம்பள ரசீது போன்ற ஆவணங்களை வைத்துக்கொண்டு போலியாக கையெழுத்து போட்டு அவர்களுக்கு தெரியாமலேயே லட்சுமி நாராயணன் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பாக அஸ்வின் குமார் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் லட்சுமி நாராயணன் இதுவரை 1.8 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.