இஸ்ரேலின் ஹைபாவில் உள்ள ஹெக்ட் அருங்காட்சியகத்திற்கு அலெக்ஸ் என்பவர் தனது 4 வயது மகனை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏராளமான பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடும்படியான ஒன்று தான் 3500 வருடம் பழமையான ஜாடி.

அந்த ஜாடியானது மன்னர் சாலமன் காலத்திற்கும் முந்தையது என்றும் அது மதுபானம் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை சேகரிக்க பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தந்தை அலெக்ஸுடன் வந்த நான்கு வயது சிறுவன் அந்த ஜாடியின் அழகைப் பார்த்து ரசித்தவாறு லேசாக பிடித்து இழுத்து உள்ளார்.

இதில் அந்த ஜாடி கீழே விழுந்து உடைந்து விட்டது. ஜாடி உடைந்ததும் சிறுவன் பயந்துவிட்டான். அலெக்ஸ் தனது மகனை சமாதானப்படுத்தி விட்டு அருங்காட்சியாக காவலாளியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். சூழ்நிலையை புரிந்து கொண்ட அருங்காட்சிய அதிகாரிகள் சிறுவனையும் அவனது தந்தையையும் மற்ற பொருட்களை பார்க்க அழைத்துச் சென்றனர்.

அதோடு உடைந்த ஜாடியை சரி செய்ய நிபுணர் ஒருவரையும் நியமித்துள்ளனர். இதுகுறித்து அருங்காட்சியகத்தின் பிரதிநிதியான லிஹி லாஸ்லோ கூறுகையில் பழமை வாய்ந்த பொருட்களை சிலர் வேண்டுமென்றே உடைப்பார்கள், சேதப்படுத்துவார்கள் அப்படி ஒரு செயல் நடந்திருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.

இது அறியாக் குழந்தை தெரியாமல் செய்த தவறு என்பதால் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை எனக் கூறியுள்ளார். எது எப்படியோ சிறுவன் தெரியாமல் செய்து இருந்தாலும் 3500 வருட பழமை வாய்ந்த பொருள் ஒரு நொடியில் நொறுங்கியது அருங்காட்சியகத்திற்கு இழப்புதான்.