கர்நாடக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா, தன்னை எதிர்கொண்ட ஹனி டிராப் சூழ்ச்சியை தோற்கடித்ததாக பரபரப்பான தகவலை சட்டசபையில் வெளியிட்டுள்ளார். அழகான பெண்களை நெருக்கமாக இருக்க வைத்து பின்னர் அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்து மிரட்டும் முறை ஹனி டிராப் என அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இத்தகைய சூழ்ச்சிகள் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, தும்குருவைச் சேர்ந்த அமைச்சர் ஹனி டிராப்பில் சிக்கியதாக கூறப்படுவது தொடர்பாக தான் மற்றும் பரமேஷ்வரா மட்டும் தும்குருவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.

பா.ஜ.க. எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல், சட்டமன்றத்தில் பேசியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஹனி டிராப்பில் சிக்க முயற்சிக்கப்பட்டதாக கூறி, விவாதத்துக்கு காரணமாக இருந்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜண்ணா, “கர்நாடகா சிடி மற்றும் பென் டிரைவ் ஆலையாக மாறிவிட்டது” என சுட்டிக்காட்டி, இது ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனை என்றும், இதற்கான பின்னணி நபர்கள் யார் என்பதை வெளிக்கொணர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளதாகவும், உயர்மட்ட விசாரணை அவசியம் எனவும் தெரிவித்தார்.

இதில் மேலும் ஆழமாகக் குரல் கொடுத்த அமைச்சர் ராஜண்ணா, மாநிலத்திலும், தேசிய அளவிலும் 48 அரசியல் தலைவர்கள் ஹனி டிராப்பில் சிக்கியுள்ளனர் என்று அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறியுள்ளார். இது பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை உள்ளடக்கியதாகவும், இதற்குப் பின்னால் இருக்கின்ற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் யார் என்பதைப் பொதுமக்கள் அறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவரது குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, கர்நாடக மாநில அரசு இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.