
பிரான்ஸ் நாட்டின் வான்னெஸ் நகரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோயல் லிஸ்கோர்னெக் (74) மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் 2017-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார், ஆனால் இதற்கு முன்பே 2005-ஆம் ஆண்டில் குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை வைத்திருந்ததாக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது, இவரிடம் சிகிச்சைக்காக சென்ற பல பெண்கள், குறிப்பாக மைனர்களாக இருந்தவர்கள், பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்த விசாரணையில், ஜோயல் 1989 முதல் 2014 வரை பணிபுரிந்த மருத்துவமனைகளில் 299 நோயாளிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய பல்வேறு துஷ்பிரயோக நடவடிக்கைகள், நோயாளிகள் மயக்க நிலையில் இருக்கும்போது நிகழ்ந்ததாகவும் அவர் சுயமாகவே ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரான்ஸ் முழுவதும் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், டாக்டர் ஜோயல் தனது மகனின் தோழிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பிரான்ஸ் நாடு மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, மருத்துவ துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.