
கேரளா மலப்புரம் அருகிலுள்ள திரூர் பகுதியை சேர்ந்த சித்திக்(58), கோழிக்கோடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். கடந்த 18-ம் தேதி மாயமான சித்திக், கடந்த சில தினங்களுக்கு முன் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப் பகுதியில் டிராலி பேக்கில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவ்வழக்கில் ஷிபிலி, ஃபர்ஹானா போன்றோர் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோழிக்கோடு அருகில் ஓலவன்னா பகுதியில் சித்திக் நடத்தி வந்த ஹோட்டலில் ஷிபிலி(22) பணிக்கு சேர்ந்து உள்ளார். எனினும் ஏதோ காரணத்தால் ஷபிலியை வேலையில் இருந்து சித்திக் நீக்கினார். இதன் காரணமாக அவர் மீது ஷிபிலி கடும் கோபத்தில் இருந்து உள்ளார். அதோடு சித்திக்கிடம் இருந்து பணம் பறிக்கவும் திட்டமிட்டு உள்ளார். அதன்படி தன் தோழி ஃபர்ஹானா (18), அவரது நண்பர் ஆஷிக் போன்றோரிடம் ஆலோசனை நடத்தி உள்ளார்.
சம்பவத்தன்று கோழிக்கோடு எரஞ்சிபாலம் பகுதியிலுள்ள ஹோட்டலில் சித்திக் அறை எடுத்து தங்கி இருந்தார். அங்கு ஷிபிலி, ஃபர்ஹானா, ஆஷிக் போன்றோர் சென்று உள்ளனர். சித்திக்கை ஆபாசமாக படம் எடுத்து பின் அவரிடம் பணம் கேட்டு மிரட்ட 3 பேரும் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் சித்திக்கிடம் ஆடைகளை கழற்றுமாறு கூறி உள்ளனர். அப்போது அவர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு பர்ஹானா தன் கையில் வைத்திருந்த சுத்தியலை ஷிபிலியிடம் கொடுக்க, அவர் சித்திக்கின் தலையில் அடித்து உள்ளார்.
இதில் சித்திக் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில் அவரது மார்பில் பல முறை எட்டி உதைத்திருக்கிறார் ஆஷிக். சித்திக் இறந்தபின் எலக்ட்ரிக் கட்டர் வாயிலாக உடலை துண்டு துண்டாக வெட்டிய கொலையாளிகள், 2 டிராலி பேக்கில் அதை போட்டுள்ளனர். இது சம்மந்தமான சிசிடிவி காட்சிகளும் காவல்துறையினருக்கு முக்கிய ஆதாரமாக கிடைத்துள்ளது. கொலையாளிகள் ஷிபிலி, ஃபர்ஹானா போன்றோர் சென்னைக்கு தப்பி சென்ற நிலையில், கைது செய்யப்பட்டு உள்ளனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.