கேரள மாநிலம் கோட்டையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் பண மோசடி குறித்து புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றார். அந்த புகாரின் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பிஜு என்பவர் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்றால் எனக்கு மது பாட்டில் வாங்கிட்டு வா என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கடைக்கு சென்று மது பாட்டில் வாங்கி சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார். அவர் நைசாக பெண்ணிடம் பேச்சு கொடுத்து தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என வற்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி அந்த பெண் பிஜுவிடம் ஆசையாக பேசி ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்தார். அதனை நம்பி சப் இன்ஸ்பெக்டர் பிஜுவும் அங்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிஜுவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.