மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சதீஷ் சௌஹான் என்ற நபர், தன் தலைக்கவசத்தில் சிசிடிவி கேமரா பொருத்தி சாலையில் செல்வதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கான காரணம் தான் தற்போது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அதாவது இந்தூர் மாவட்டத்தின் ஹிராநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌரி நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் சௌஹான், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலிராம் சௌஹான் மற்றும் முண்ணா சௌஹான் என்பவர்களுடன் சொத்து தகராறு காரணமாக நீண்ட காலமாக சிக்கலை எதிர்கொண்டு வருகிறார். “எனது சொத்துக்களை கைப்பற்ற விரும்புகிறார்கள். என் வீட்டிற்குள் நுழைந்து எனது குடும்பத்தினரையும் அடித்துள்ளனர்” என சதீஷ் கூறுகிறார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களையும் அவர்கள் அகற்றியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது பற்றி போலீசில் புகார் அளிக்கச் சென்ற போதும், காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காததால், தனது உயிர் மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பிற்காகவே சதீஷ் தனது தலைக்கவசத்தில் ஒரு சிசிடிவி கேமரா பொருத்தி செல்ல ஆரம்பித்துள்ளார். “நான் செல்லும் இடங்களில் என்ன நடக்கிறது என்பதற்கான வீடியோக்களை பதிவு செய்து, ஒரு நாள் நீதிக்காக காட்சிப்படுத்தவே இதைச் செய்கிறேன்” என அவர் கூறுகிறார்.
சதீஷின் இந்த நிலை குறித்து @Anurag_Dwary என்ற சமூக ஊடகப் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், “முதலில் இந்த படம் உங்கள் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இங்கே ஒரு நபர், பாதுகாப்பு கிடைக்காமல், தவிக்கிறார்” என்று பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ பெரும் வருத்தத்துடன் இணையத்தில் பரவி வருகிறது. மேலும், சதீஷ் தன்னுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண சமூக ஆதரவு தேவை எனவும், தனது வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
पहली नज़र में ये तस्वीर हंसा सकती है, फिर सुनिये इंदौर में ये शख्स दरअसल व्यवस्था से मजबूर होकर हेलमेट में सीसीटीवी लगाकर घूमते हैं pic.twitter.com/OfNJMCiwfv
— Anurag Dwary (@Anurag_Dwary) July 13, 2025
