ஷஹீன் அப்ரிடி மற்றும் ஹரிஸ் ரவுஃப் ஆகியோருக்கு எதிராக ஏதேனும் திட்டங்கள் உள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு அஜித் அகர்கர் “விராட் கோலி பார்த்துக்கொள்வார்” என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்..

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் நேற்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களை சந்தித்தனர். இருவரும் ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை ஊடகங்கள் முன் அறிவித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் ரோஹித்தும், அகர்கரும் பதிலளித்தனர்.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு முடிந்ததும் ரோஹித்தும், அகர்கரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அணி தேர்வு, இந்திய அணி எதிர்கொள்ளும் சவால்கள் என பல தலைப்புகளில் பதில் அளித்தார். அதேநேரம், இந்த செய்தியாளர் சந்திப்பில், ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை பற்றி  பத்திரிகையாளர் ஒருவர் அகர்கருக்கு நினைவூட்டினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களான ஷஹீன் அப்ரிடி மற்றும் ஹரிஸ் ரவுஃப் ஆகியோருக்கு எதிராக ஏதேனும் திட்டங்கள் உள்ளதா? என ஒரு பத்திரிகையாளர் இந்தக் கேள்வியைக் கேட்டார். அதற்குப் பதிலளித்த அகர்கர் சிரித்துக் கொண்டே “விராட் அவர்களை கவனித்து கொள்வார்” என கூறினார்.

விராட் கோலி இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் எப்போதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ​​160 ரன்கள் இலக்கை விராட் கோலி (53 பந்துகளில் 82 ரன்கள்) தனி ஒருவராக சேஸ் செய்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். ஹர்திக் பாண்டியா (40 ரன்கள்) அவருக்கு உறுதுணையாக இருந்தார் இப்போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை விராட் சிறப்பாக கவனித்தார் (அடித்து நொறுக்கினார்).

குறிப்பாக ஹரிஸ் ரவுஃப் வீசிய 19வது ஓவரில் கோலி அடித்த 2 சிக்ஸர்கள் இன்னும் ரசிகர்களின் கண் முன்னே நிற்கிறது. 2021 டி20 உலகக் கோப்பையில், ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் ஆகியோரை ஷாஹீன் அப்ரிடி வெளியேற்றி, இந்தியாவுக்கு எதிரான முதல் உலகக் கோப்பை வெற்றியை பாகிஸ்தான் பெற முக்கிய காரணமாக இருந்தார். இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் கோலி 49 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 2022 ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த போதிலும் விராட் கோலி 60 ரன்கள் எடுத்ததும் நினைவுகூரத்தக்கது. எனவே பாகிஸ்தான் என வந்துவிட்டால் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் கிங் கோலியை நம்பலாம். பாகிஸ்தானுக்கு எதிராக அவரது ஆட்டம் சிறப்பாகவே உள்ளது. வரும் ஆசிய கோப்பையிலும் விராட் கோலி சிறப்பாக ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்..