ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக அவர் இந்தியாவின் எந்த மைதானத்திற்கு சென்று விளையாடினாலும் அவருக்கு எதிராக ரசிகர்களின் கேலி கிண்டல் என்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தற்போது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது, இதுதான் பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள பிரச்சனையாகும். ரசிகர்கள் நாங்கள் முன்னேற மாட்டோம் என்ற வகையில் இருக்கிறார்கள்.

ரசிகர்கள் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் அவர் உங்களுடைய வீரர். உங்கள் அணிக்காக தான் அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் உங்கள் அணியை வெற்றி பெற செய்யக்கூடியவர். எனவே அவருக்கு எதிராக நீங்கள் வெறுப்பை காட்டக்கூடாது. அவரை நீங்கள் கொஞ்சம் விமர்சிக்கலாம். ஆனால் தொடர்ந்து அப்படி விமர்சிக்காமல் அதிலிருந்து விலக வேண்டும். ஐபிஎல் தொடர்களில் இது போன்ற முடிவுகள் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்படும். சிஎஸ்கே அணியை போன்று மும்பை அணியிலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கலாம். ஆனால் என்னை பொருத்தவரை இந்த சீசனில் ரோகித் சர்மாவை கேப்டனாக தொடர்ந்திருக்கலாம். அடுத்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கலாம். மேலும் உங்களுடைய சொந்த வீரருக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் அர்த்தம் இல்லை என்று கூறியுள்ளார்.