உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாசலில் நடந்த ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம், ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பின் மீதும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. உயிரிழந்த மனைவியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லக் கூட வழியில்லாமல், கொட்டும் மழையில் ஸ்டெர்ச்சருடன் ஏழை கணவனும் அவரது சிறுமி மகளும் காத்திருந்த சோகம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் ஆதிவாசி. இவரது மனைவி ராமவதி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். முதலில் ஓர்ச்சா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை, நிலைமை மோசமானதால் மருத்துவர்கள் ஜான்சி மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கையிலிருந்த சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு, ஒரு வழியாக டேக்ஸி மூலம் தனது 8 வயது மகள் நந்தினியுடன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார் ராகுல். ஆனால், மருத்துவமனைக்கு வந்தடைந்த சிறிது நேரத்திலேயே ராமவதி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

உயிரிழந்த மனைவியின் உடல் ஸ்ட்ரெச்சரில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், சொந்த ஊரான நக்டா கிராமத்திற்கு உடலைக் கொண்டு செல்வதற்குத் தேவையான வாகன வசதியோ அல்லது அதற்கான பணமோ அந்த ஏழைத் குடும்பத்திடம் இல்லை. மனைவியை இழந்த துயரத்தோடு, உடலை எப்படி ஊருக்குக் கொண்டு செல்வது என்று அறியாமல் திகைத்து நின்ற ராகுல், மருத்துவமனை வளாகத்தில் வாகன நிறுத்துமிடத்தின் மேற்கூரையின் கீழ் மனைவியின் பிணத்தோடு தன் மகளையும் வைத்துக்கொண்டு அமர்ந்தார். அப்போது வெளியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அருகில் அமர்ந்திருந்த சிறுமி நந்தினி தன் தாயின் உடலைப் பார்த்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் இதயத்தை நொறுக்கியது.

உதவி கேட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தத் தந்தை-மகள் இருவரும் மழையில் தவித்துள்ளனர். அந்த வழியாகச் சென்ற உத்தரப்பிரதேச காவலர் ஒருவர், இந்தத் துயரமான காட்சியைக் கண்டு உடனடியாக அவர்களிடம் விசாரித்தார். நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த காவலர், உடனே சொந்த முயற்சியில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஏற்பாடு செய்து, ஏழைத் தம்பதியின் உடலை சொந்த ஊருக்குப் பத்திரமாக அனுப்பி வைத்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரி முதன்மை மருத்துவ அதிகாரி (CMS) டாக்டர் சச்சின் மாஹூர் கூறுகையில், “உடலை எடுத்துச் செல்ல வசதியில்லாதவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இலவசப் பிணவற வாகனங்கள் வழங்கப்படுகின்றன. ஒருவேளை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் சிரமத்தை மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம்” என்றார்.

சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்திலும், சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமல் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பெற்றோரின் மடியிலேயே உயிர் இழந்த அவலச் சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.