தஞ்சாவூரில் டிடிவி தினகரனுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “மழையினால் நெல் மூட்டைகள் நனைந்து விவசாயிகள் கண்ணீர் வடித்தபோது, நேரில் வந்து பார்க்காத இந்த ‘டெல்டாக்காரர்’ எங்கே போனார்?” என கேள்வி எழுப்பினார். மேலும், “ஸ்டாலின் ஒன்னும் டெல்டாக்காரர் கிடையாது, அவர் ஒரு உல்டாகாரர்” என அவர் நக்கலாகப் பேசியது அங்கிருந்த தொண்டர்களிடையே பலத்த சிரிப்பையும் கைதட்டலையும் வாங்கியது.

​தொடர்ந்து பேசிய அவர், கரும்புத் தோட்டத்திற்குள் கான்கிரீட் சாலை அமைத்து முதல்வர் ஆய்வு செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தைக் கிண்டல் செய்தார். “விவசாயிகளின் கஷ்டம் தெரியாத ஒரு முதல்வர் நமக்குத் தேவையா?” என ஆக்ரோஷமாக முழங்கிய இபிஎஸ், டெல்டா மக்களின் வாக்குகளைக் குறிவைத்து திமுக அரசுக்கு எதிராகச் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். எடப்பாடியின் இந்த ‘உல்டாகாரர்’ கமெண்ட் இப்போது அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.