கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், பள்ளி பஸ்சில் பயணித்த எல்.கே.ஜி. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் பள்ளி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் முகமது ஆஷிக் (28). இவர், கடுங்கத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற எல்.கே.ஜி. மாணவியை பஸ்சிற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி முகமது ஆஷிக்கை கைது செய்தனர். அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர், மலப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, சம்பவம் வெளியானதை தொடர்ந்து முகமது ஆஷிக்கின் வீட்டிற்கு சிலர் சென்று அவரையும், அவரது சகோதரியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.