ஹரியானா மாநிலத்தில் பள்ளி செல்லும் வழியில் காரில் பயணித்த மூன்று மாணவர்கள், பெண் ஆசிரியையின் ஸ்கூட்டரை பின்னால் இருந்து மோதியதும், சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றதும், அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அருண் மாலிக் என்பவர் மனைவி சங்கீதா. இவர்  திகாரம் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். காலை, வழக்கம்போல தனது ஸ்கூட்டியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அவர், செக்டார்-23 பகுதியில் உள்ள 100 அடி அகல சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியது.

இதனால் சங்கீதாவின் கால் மற்றும் முழங்கையில் காயம் ஏற்பட்டது. விபத்துக்குப் பிறகு, காரில் இருந்த மாணவர்கள் ஆசிரியைக்கு உதவாமல் அங்கிருந்து அதிவேகமாக தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்டது என சந்தேகம் இருப்பதாக அருண் மாலிக் புகாரில் குறிப்பிடுகிறார்.

அவர், ஜூலை 4ஆம் தேதி போலீசில் புகார் அளித்ததாகவும், மூன்று நாட்கள் கழிந்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து, அந்த காரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ரவீந்திரன் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை விரைவில் வெளிக்கொணர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.