திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதத்தில் ஏகாதேசி விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வைகுண்ட ஏகாதேசி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு டிசம்பர் 23 ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து டிசம்பர் 23 முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பதால் நாள் ஒன்றுக்கு 50,000 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் ஐந்து லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இதற்காக பத்து இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்படும் எனவும் இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் 10 நாட்களுக்கு இலவச டோக்கன் மற்றும் ஆன்லைன் டிக்கெட் இருந்தால் மட்டுமே தரிசனம் எனவும் எந்தவித டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.