2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் 2023-24 வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம், உர மானியம், கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் கடன், டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகிறது.

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசியதாவது, தமிழ்நாட்டில் தற்போது 63 லட்சத்து 43 ஆயிரம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு உள்ளது என்று அவர் அறிவித்துள்ளார். புன்செய் நிலங்களுக்கும், உரிய பயிர்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை உருவாகியுள்ளது. தானியங்கள் மட்டுமல்ல காய்கறிகள், பழங்கள் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்தை பாதுகாப்பது அவசியம் என தெரிவித்தார். மேலும் வறட்சி, வெள்ளப் பாதிப்புகளை சமாளிக்கும் அடிப்படையில் பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.