தமிழக சட்டப்பேரவையில் 2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்ற திருக்குறளுடன் வேளான் பட்ஜெட்டை உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அவர் ஆற்றிய உரையில், 2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 45 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது. இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது. இயற்கை பேரிடர் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ரூ. 380.40 கோடி நிவாரணமாக 4.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.இரண்டு லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் தயாரிக்க ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூபாய் 208.20 கோடி நிவாரணம் விரைவில் வழங்கப்படும். 2.7 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும். ரூ 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பொறுப்பை அரசை ஏற்றது.

உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் ரூபாய் 10 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு இந்த வேளாண் பட்ஜெட்டில் ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டத்திற்கு ரூபாய் 36 புள்ளி 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக உருவாக்க ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும். 100 இளைஞர்களுக்கு தலா ரூ 1 லட்சம் மானியம் வழங்க ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 5 கோடியில் 100 உழவர் அங்காடிகள் அமைக்கப்படும், உழவர் சந்தை போன்று தரமான வேளாண் பொருட்களை நகர்ப்புறங்களில் விற்பனை செய்ய உழவர் அங்காடி அமைக்கப்படும். கரும்பு சாகுபடி மேம்படுத்த 20.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கிய விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூபாய் 215 சிறப்பு தொகை வழங்கப்படும். எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி விரிவாக்கம் செய்ய ரூபாய் 45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 15 ஆயிரத்து 810 மெட்ரிக் டன் பயிர் வகைகள் எண்ணெய் வித்து விதைகள் 50 முதல் 60% மானியத்துடன் வழங்கப்படும். மா பலா வாழை எனும் முக்கனி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூபாய் 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூபாய் 27.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கு உகந்த மாம்பழம் உற்பத்திக்கு 250 ஏக்கரில் மாந்தோப்புகள் உருவாக்கப்படும். ரூபாய் 12.73 கோடி நிதி ஒதுக்கீட்டில் வாழை பரப்பு விரிவாக்கம் முட்டுக் கொடுத்தல் மேற்கொள்ள மானியம் வழங்கப்படும். புதிய பலா  ரகங்களில் சாகுபடியை ஊட்டுவிக்க ரூபாய் 1.14 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முந்திரி சாகுபடி பரப்பை அதிகரித்து உற்பத்தியை உயர்த்திட ரூபாய் 3.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டத்திற்கு ரூபாய் 36.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2.2 லட்சம் ஏக்கரில் நுண்ணுயிர் பாசன திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 773 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.