கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பம்பாடி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்போது ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகனுக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இரு வீட்டு சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்ற நிலையில் பெண்ணுக்கு திருமணத்தில் விருப்பமில்லை. இதனை திருமணம் முடிந்த முதலிரவின் போது என் மகனிடம் அந்த பெண் கூறியுள்ளார். அதோடு தான் வேறொருவரை காதலிப்பதாகவும் அவர் என் மகனிடம் கூறியுள்ளார். இதனால் என்னுடைய மகன் அந்த பெண்ணை அவருடைய தாய் வீட்டிற்கு அனுப்பிய நிலையில் அவர்களின் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து மீண்டும் எங்கள் வீட்டிற்கு அனுப்பியதோடு சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினர். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி என்னுடைய மகனுக்கு அந்த பெண் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து விட்டார். இதனால் என் மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறான்.

தற்போது புதுச்சேரி மருத்துவமனையில் என் மகன் சிகிச்சை பெற்று வருகிறான். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் தாங்களும் உரிய விசாரணை மேற்கொண்டு அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கணவனின் குடும்பத்தினர் தான் அந்த பெண் விஷம் கலந்து கொடுத்ததாக கூறும் நிலையில் போலீசார் இன்னும் அதனை உறுதிப்படுத்தவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நாட்டையே உலுக்கிய கீரிஷ்மா வழக்கில் தன் காதலனுக்கு அவர் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததால் தூக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.