
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போது சீதாலட்சுமிக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பெரியார் மண்ணில் நின்று கொண்டே நான் விமர்சிக்கிறேன் உங்களால் என்ன செய்ய முடியும். நீங்கள் வைத்திருப்பது பெரியார் எனும் வெறும் வெங்காயம் தான். ஆனால் என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது. நீங்க வெங்காயத்தை வீசினால் நான் வெடிகுண்டை வீசுவேன் என்று கூறினார். இந்த பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி சீமான் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அதாவது பெரியார் அமைப்பினர் சார்பில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே பெரியார் பற்றி அவதூறாக பேசிய நிலையில் சீமான் மீது வடலூர் மற்றும் ராணிப்பேட்டை காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கருங்கல்பாளையம் காவல்துறையினர் வருகிற 20-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் காவல்துறையினர் சீமான் வீட்டிற்கு நேரடியாக சென்று கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளனர்.