கர்நாடக மாநிலத்தில் உள்ள கோட்டேஸ்வர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இதற்குப் பின்புறம் ஒரு ‌ பஞ்சர் பார்க்கும் கடை இருக்கிறது. இங்கு அப்துல் ரக்ஷித் என்ற 19 வயது வாலிபர் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம்போல் சம்பவ நாளில் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு வேன் ஓட்டுநர் வந்து மாற்று டயரில் பஞ்சர் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி வாலிபரும் அந்த டயரின் மீது அமர்ந்து காற்றடைத்தார். அப்போது காற்று அதிகமானதால் அழுத்தம் தாங்காமல் திடீரென டயர் வெடித்தது.

அந்த டயர் ஒரு வெடிகுண்டு போல் பயங்கர சத்தத்துடன் வெடித்த நிலையில் அதன் மேல் அமர்ந்திருந்த வாலிபர் மேலே தூக்கி வீசப்பட்டார். அந்த வாலிபர் காற்றில் பறந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் வந்த நிலையில் அந்த வாலிபர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.