சிங்கப்பூரில், வீட்டுப்பணி செய்யும் ஒரு வெளிநாட்டு பணிப்பெண், தனது அதிகாரப்பூர்வ வேலைக்கு அப்பாற்பட்டு, கூடுதல் சம்பளம் பெற பல வீடுகளில் பணியாற்றியதால், நீதிமன்றம் அவருக்கு 13,000 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.8.8 லட்சம்) அபராதம் விதித்துள்ளது.

சிங்கப்பூர் சட்டப்படி, வெளிநாட்டு உள்பணியாளர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ எம்ப்ளாயரிடம் மட்டுமே பணியாற்ற வேண்டும்; இதை மீறுவது சட்டவிரோதமாகும். அந்த பணிப்பெண்  நடவடிக்கை குறித்து 2024 டிசம்பரில் மனிதவள அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்ததும் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில், பிடோ எர்லிண்டா ஒகாம்போ (53) என்ற அந்த பெண், 1994 முதல் சிங்கப்பூரில் சட்டபூர்வமாக வேலை செய்துவருகிறார் என்பது தெரியவந்தது. ஆனால், அவர் 2018 ஏப்ரல் முதல் 2020 பிப்ரவரி வரை மற்றும் பின்னர் 2022 மார்ச் முதல் 2024 செப்டம்பர் வரை 64 வயதான சோ ஓய் பேக் மற்றும் புலக் பிரசாத் ஆகியோரின் வீடுகளிலும் பகுதி நேரமாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். மாதத்தில் இரண்டு முறை 2–4 மணி நேரம் சுத்தம் செய்ததற்காக அவர் 375 சிங்கப்பூர் டாலர் கூடுதல் சம்பளம் பெற்றுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டில், பணிப்பெண்ணை  வேலைக்கு அமர்த்திய சோ ஓய் பேக் என்பவருக்கும் 7,000 சிங்கப்பூர் டாலர்(479086 Rs ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சட்டப்படி, வெளிநாட்டு உள்பணியாளர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தினால், எம்ப்ளாயருக்கு 5,000 முதல் 30,000 டாலர் வரை அபராதம் மற்றும் ஒரு வருட சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அதேபோல், வெளிநாட்டு உள்பணியாளர்கள் விதியை மீறினால், அதிகபட்சம் 20,000 டாலர் அபராதம் மற்றும் இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.