தமிழ்நாட்டில் வீடுகளை வாடகைக்கு கொடுக்க விரும்பும் உரிமையாளர்களை குறிவைத்து, புதிய வகையான ஜிஎஸ்டி மோசடிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு ஜிஎஸ்டி நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கிறது. அதாவது வாடகைதாரர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடித்து, சட்டப்படி ஒப்பந்தம் செய்து, முன்பணம் செலுத்துவதன் மூலம் உண்மையான பயனாளிகள் போல் தோன்றுகிறார்கள். ஆனால், பின்னர் அந்த வீட்டு முகவரியை வைத்து போலி ஜிஎஸ்டி பதிவுகளை செய்து, வரிவிலக்குகள் பெற்றுச் செல்கின்றனர்.

இந்த போலி நிறுவனங்கள், அந்த முகவரியை வைத்து மோசடியாக வர்த்தகம் செய்வது மட்டும்  அல்லாமல், சட்டவிரோதமாக போலி பில்லுகள் தயாரித்து, ஐ.டி.சி (ITC) போன்ற வரிவிலக்குகளையும் பெற்று அரசை ஏமாற்றுகின்றன. இந்தப் புகார்களைத் தொடர்ந்து வருவாய் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யும்போது, வீட்டு உரிமையாளரே முதலில் சந்தேகத்தில் சிக்க நேரிடுகிறது. உரிய ஆவணங்கள் இல்லையென்றால், உரிமையாளரே பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

இதனைத் தவிர்க்க, வீட்டு உரிமையாளர்கள் சில முக்கிய முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமான, பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் அவசியம். அதில், குடியிருப்பு மட்டுமே எனவும், வணிக நோக்கங்களுக்காக அல்லது ஜிஎஸ்டி பதிவுக்காக பயன்படக்கூடாது எனவும் தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும் வாடகையாளரின் ஆதார், பான், வேலை விவரங்கள், நிரந்தர முகவரி உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்துடன் இணைத்து வைக்க வேண்டும். இந்த எளிய நடவடிக்கைகள் உங்கள் சொத்தையும், சட்டரீதியான பாதுகாப்பையும் உறுதி செய்யும் என ஜிஎஸ்டி நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.