
உத்திரபிரதேசம் மாநிலம் ரெபரேலியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் முகமது ஆசிப் கோடை விடுமுறையில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு வகுப்பில் உள்ள ஒரு மாணவன் சில தனிப்பட்ட பிரச்சனைகளால் வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை என்று கூறியதால் கோபமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை பிரம்பால் அடித்துள்ளார்.
அதில் அந்த மாணவன் மயங்கி கீழே விழுந்த நிலையில் மாணவனின் வாய் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் மாணவனின் பல் உடைந்தது. மாணவன் மயங்கி கீழே விழுந்ததும் ஆசிரியர் முகமது அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் பற்றி வகுப்பறையில் இருந்த மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு தெரிவித்த நிலையில் பிறகு மாணவனை மீட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மாணவன் நலமாக உள்ள நிலையில் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆசிரியரை கைது செய்துள்ளனர்.