கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் சாகர் தாலுகா கௌதம்புரா பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஹூச்சம்மா என்ற 76 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் பிரேமா என்ற பெண் வசித்து வரும் நிலையில் இவர் மூதாட்டியின் வீட்டின் முன்பாக குப்பைகளை கொண்டு போய் கொட்டியுள்ளார்.

இதனை பார்த்த மூதாட்டி எதற்காக என்னுடைய வீட்டின் முன்பாக குப்பைகளைக் கொட்டினாய் என அந்த பெண்ணிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது. அப்போது பிரேமாவுக்கு ஆதரவாக அவரின் குடும்பத்தை சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் தர்ஷன் ஆகியோர் மூதாட்டியிடம் வந்து தகராறு செய்தனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய பிரேமா வயதான பெண்மணி என்று கூட பாராமல் அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டி வைத்து அவரை தாக்கினார். இவருக்கு மஞ்சுநாத் மற்றும் தர்ஷன் ஆகியோரும் உடந்தை. பின்னர் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வந்து மூதாட்டியை மீட்ட நிலையில் இது தொடர்பாக அந்த மூதாட்டியின் மகன் கண்ணப்பா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி போலீசார் பிரேமாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ள நிலையில் தர்ஷன் மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.