பாம்பைப் பார்த்தாலே படையே நடுங்கும் என்பார்கள், ஆனால் இந்த நபர் பாம்பையே நடுங்க வைப்பார் போல! இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் ‘பச்சைப்பாம்பு’ என்று சொல்லப்படும் கிரீன் வைன் ஸ்னேக் (Green Vine Snake) தன் மணிக்கட்டை ஆழமாகக் கடிக்க விடுகிறார். பாம்பின் பற்கள் சதையினுள் இறங்கி இருக்கும் நிலையிலும், அந்த நபர் வலி தெரியாதது போல மிகவும் சாதாரணமாக கேமராவிடம் பேசிக்கொண்டிருப்பது பார்ப்பவர்களை உறைந்து போகச் செய்கிறது.
அந்த வீடியோவில் அவர் பேசும்போது, “இது ஒரு வகையான மெல்லும் கடித்தல் (Chewing bite). இதன் விஷம் என் உடலுக்குள் இறங்கும் வரை இது பிடியை விடாது” என்று விளக்குகிறார். மேலும், இந்த வகை பாம்புகள் பெரிய அளவில் விஷம் கொண்டவை அல்ல என்றும், அதிகபட்சம் லேசான வீக்கம் அல்லது வலி மட்டுமே ஏற்படும் என்றும் கூறுகிறார். சுமார் 1.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோவிற்கு, “இதையெல்லாம் ட்ரை பண்ணிப் பார்க்க யாருக்காவது தைரியம் இருக்கா?” என்று நெட்டிசன்கள் சவால் விட்டு வருகின்றனர்.
