நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தலைஞாயிறு வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நெல் தரிசில் பயிர் சாகுபடி ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் 4000 ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயிறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உளுந்து மற்றும் பச்சைபயிறு பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் போன்றவை மானிய விலையில் கொத்தங்குடி, பனங்காடி, தலைஞாயிறு, நீர் முளை போன்ற வேளாண்மை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இவை வழங்கப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் நெல் அறுவடைக்கு பின் பயிறு வகை பயிர்களை பயிரிடுதல் மூலமாக மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இதனை சாகுபடி செய்வதால் குறைந்த நாட்களில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கிறது. தற்போது தலைஞாயிறு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நிறைவு பெறுகின்ற நிலையில் உளுந்து மற்றும் பயிர் சாகுபடி செய்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.