பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் காரிக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சிறு தகராறில் 15 நாள் பச்சிளம் குழந்தை மற்றும் ஒரு பெண் என இருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பாகல்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த சில மாதங்களாகத் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், விளையாட்டாக அண்டை வீட்டின் மீது செருப்பு ஒன்றை வீசியுள்ளான். இந்தச் சிறிய விஷயத்திற்காக அண்டை வீட்டில் வசிக்கும் ஜெய்கிந்த் பாஸ்வான் என்பவர் அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆபாசமாகத் திட்டி வந்துள்ளார்.

சம்பவத்தன்று, அந்தப் பெண் வீட்டின் வெளியே இருந்த சமயம், அவரது 15 நாள் குழந்தை மட்டும் அறையில் உள்ள கட்டிலில் தனியாக இருந்துள்ளது. அப்போது வீட்டிற்குள் புகுந்த ஜெய்கிந்த் பாஸ்வான், அந்தக் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு அந்தப் பெண் உள்ளே ஓடி வந்தபோது, ஜெய்கிந்த் பாஸ்வான் அறையிலிருந்து தப்பியோடியுள்ளார். அவசர அவசரமாகத் தப்ப முயன்றதில், அவர் தனது மொபைல் போனை அந்த அறையிலேயே விட்டுச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணும் அவரது சகோதரிகளும் அவரைப் பிடிக்க முயன்றும் அவர் தப்பியோடிவிட்டார்.

இந்தக் கொடூரம் இத்துடன் நிற்கவில்லை. ஜெய்கிந்த் பாஸ்வானின் மனைவி, பாதிக்கப்பட்ட பெண்ணின் இளைய சகோதரி மீது செங்கல் கொண்டு பயங்கரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்தப் பெண்ணும் உயிரிழந்தார். ஒரே நேரத்தில் இருவர் கொல்லப்பட்டதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

மேலும்  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காரிக் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நவகச்சியா துணைப் பிரிவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய ஜெய்கிந்த் பாஸ்வான் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு சிறிய செருப்பு வீசிய விவகாரம், இரண்டு உயிர்களைப் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.