சென்ற 1997-ம் வருடம் டைரக்டர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்து வெளியாகிய படம் “சூர்யவம்சம்”. இப்படத்தில் தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்த படத்தில் சரத்குமார் சக்திவேல் கவுண்டர் மற்றும் சின்ராசு ஆகிய 2 கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் “சூர்யவம்சம்” படம் வெளியாகி 26 வருடங்களை கடந்துள்ளது. இதை தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டு நடிகர் சரத்குமார் கூறியிருப்பதாவது, கலைத்துறை பயணத்தில் காலங்கள் கடந்தும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும் இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்பு வாய்ந்த குடும்ப திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 வருடங்கள் ஆகிறது. விரைவில் சூர்யவம்சம் -2 என அவர் பதிவிட்டுள்ளார். இதன் வாயிலாக சூர்யவம்சம் 2-ஆம் பாகம் வருவதை சரத்குமார் உறுதிசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.