புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். அவர்கள் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி விட்டு கடற்கரை எதிரே இருக்கும் தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் துணி மாற்றுவதற்காக கட்டணம் எடுத்தனர். அப்போது ஒரு இளம் பெண் அறைக்குள் ரகசிய கேமரா இருப்பதை பார்த்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த கடையின் ஊழியர்களான ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் மீரான் மைதீன் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் பல மாதங்களாக உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்தது தெரியவந்தது. அவர்களது செல்போனில் அந்த வீடியோக்களை பார்த்து வந்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோக்களை வைத்து யாரையும் மிரட்டினார்களா? அல்லது சோசியல் மீடியாவில் அந்த வீடியோக்களை பகிர்ந்தார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் தனியார் விடுதிகளில் செயல்பட்டு வரும் உடை மாற்று அறைகளில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் சட்ட விரோத செயல்களில் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் ரத்து செய்யப்படும் என ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.