ஆக்ரா நகரத்தின் ஒரு சாதாரண இல்லம், இன்று ஒரு புனிதத் தலமாக மாறியிருக்கிறது. நகலா போஜா பகுதியில் உள்ள அந்த வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் , இயற்கையாகத் திரண்ட உறைபனி, காண்போர் அனைவரையும் மண்டியிட வைக்கும் ஒரு தெய்வீக வடிவத்தை எடுத்திருக்கிறது. அது வெறும் பனித்துளிகளின் குவியல் அல்ல; பலரது கண்களுக்கு அது சிவபெருமானின் திவ்யமான ‘பனிலிங்கமாகவே’ காட்சியளிக்கிறது.
காஷ்மீரின் அமர்நாத் குகையில், இயற்கையாகத் தோன்றும் பனிலிங்கத்தைக் காணக் கோடிக்கணக்கான பக்தர்கள் தவம் கிடக்கும் நிலையில், ஆக்ராவின் ஒரு இல்லத்தின் ரீசருக்குள் அத்தகைய அதிசயம் நிகழ்ந்திருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
செய்தி காட்டுத்தீயாய் பரவியதும், முதல் நாளில் அக்கம் பக்கத்தினர் மட்டும் வந்தனர். ஆனால், இன்று நிலைமையே வேறாக இருக்கிறது. அருகில் உள்ள பல ஊர்களில் இருந்தும், கைகளில் பூக்கள், வில்வ இலைகள், பால் மற்றும் பழங்களுடன் பெண்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.
यूपी: आगरा में फ्रिज वाले “शिवलिंग” की पूजा लगातार जारी है। अब दूसरे मोहल्ले की महिलाएं भी दर्शन करने आ रही हैं।@madanmohansoni https://t.co/z3YRE84zvs pic.twitter.com/Z2tswN3n5p
— Sachin Gupta (@Sachingupta) July 15, 2026
அந்த இல்லமே இன்று ஒரு சிறு கோயிலாக மாறியிருக்கிறது. ‘ஹர ஹர மகாதேவ’ என்றும் ‘பம் பம் போலே’ என்றும் முழக்கமிடும் பக்தர்களின் குரல்கள், அந்த வீட்டின் சுவர்களைத் தாண்டி தெருக்களில் எதிரொலிக்கின்றன. கைகளில் பூஜை தட்டுகளுடன் வரும் பெண்கள், அந்தப் பனிச் சிலையிடம் தங்கள் குடும்பத்தின் நல்வாழ்வுக்காகவும், சுபிட்சத்திற்காகவும் கண்ணீர் மல்க வேண்டிக்கொள்கிறார்கள். சிவபுராணமும், பக்திப் பாடல்களும் அந்த இல்லமெங்கும் நிரம்பி வழிகின்றன.
அறிவியல் ரீதியாக, குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே இருக்கும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையின் மாற்றத்தினால் பனி இவ்வாறு படிந்திருக்கலாம் என்று ஒரு தரப்பு கூறினாலும், அந்த இல்லத்திற்கு வரும் பக்தர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் பார்ப்பது அறிவியலை அல்ல; தங்கள் நம்பிக்கையை. “கண்களால் பார்த்தோம், இது பனியல்ல, சிவனின் திருவருள்” என்று கூறும் பக்தர்களின் நம்பிக்கைக்கு முன்னால், விஞ்ஞான விளக்கங்கள் மௌனமாகிப் போகின்றன.
மனித மனம் எப்போதுமே அற்புதங்களை தேடிக் கொண்டே இருக்கிறது. ஒரு சாதாரணமான குளிர்சாதனப் பெட்டி, இன்று நம்பிக்கையற்ற பலருக்கு நம்பிக்கையைத் தரும் மையமாக மாறியிருக்கிறது. அந்த இல்லத்தில் குடிகொண்டிருக்கும் அந்த உறைபனிச் சிலையும், அதை வணங்கும் பக்தர்களின் ஆழமான நம்பிக்கையும், மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான பிணைப்பு எவ்வளவு மென்மையானது என்பதையே மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டுகின்றன.
