“மக்கள் ஏதாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்கள், பேசுவதுதான் அவர்களின் வேலை” என்ற பழைய பாடலின் வரிகள், தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் வாழ்க்கைக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களின் உடைகள், உணவுப் பழக்கம் முதல் சமூக வலைத்தளப் பக்கங்கள் வரை அனைத்தும் ரசிகர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ரிஷப் பண்ட்டின் பெயர் பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூருடன் இணைத்துப் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை  வைத்தே, இவர்களுக்குள் காதல் இருப்பதாக இணையவாசிகள் வதந்திகளைக் கிளப்பி வருகின்றனர்.

இருப்பினும், இந்த வதந்திகளுக்குப் பின்னால் ரிஷப் பண்ட்டின் உண்மையான காதல் கதை ஒன்று உள்ளது. ரிஷப் பண்ட் நீண்ட காலமாக உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் சுமார் பத்து ஆண்டுகள் ஒன்றாக ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சமீபகாலமாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக  செய்திகள் வெளியான போதிலும், இரு தரப்பிலிருந்தும் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், ரிஷப் பண்ட்டின் மனதைக் கவர்ந்த அந்தப் பெண் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரிஷப் பண்ட்டை நீண்ட நாட்களாகக் காதலித்த அந்தப் பெண், மாடலிங் துறையைச் சேர்ந்த ஈஷா நேகி ஆவார். நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவரான ஈஷா நேகியுடன் இருக்கும் புகைப்படங்களை ரிஷப் பண்ட் முன்னதாகத் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தங்களது காதலை உறுதிப்படுத்தியிருந்தார். “நான் உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறேன்” என்றும் அவர் உருகி எழுதியிருந்தார். அதுமட்டுமன்றி, தோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்ட ரிஷப் பண்ட்டின் சகோதரி திருமணத்திலும் ஈஷா நேகி கலந்துகொண்டது அப்போது பெரும் பேசுபொருளாக இருந்தது.

இவ்வளவு ஆழமான காதலில் இருந்த இவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. தங்களது பிரிவு குறித்து இருவருமே இதுவரை வாய் திறக்கவில்லை.  ரிஷப் பண்ட், நடிகை மிருணாள் தாகூருடன் இணைத்து பேசப்படும் இந்த புதிய காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா அல்லது இந்த வதந்திகளின் பின்னணியில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.