மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான அன்பு எப்போதும் எல்லையற்றது. வீட்டிலிருக்கும் செல்லப்பிராணிகளைத் தாண்டி, தெருக்களில் அலையும் வாயில்லா ஜீவன்களிடம் அன்பு காட்டும் மனிதர்கள் இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது கண்களையும் நனைய வைத்து வருகிறது. வெளியூர் சென்ற ஒரு பெண், தான் தினமும் உணவளிக்கும் பசுக்கள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக, ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ‘சோமாட்டோ’ மூலம் உணவை ஆர்டர் செய்து பசுக்களுக்குக் கொடுக்க வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், உணவு டெலிவரி செய்ய வந்த டெலிவரி பாயை அந்தப் பெண் போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார். தான் வழக்கமாகச் செல்லும் கோவிலுக்கு அருகில் மூன்று பசுக்கள் இருக்கிறதா என்று கேட்கிறார். டெலிவரி பாய் “ஆம்” என்று சொன்னதும், தான் ஆர்டர் செய்த மூன்று ரொட்டிகளையும் அந்தப் பசுக்களுக்கு அன்போடு ஊட்டி விடுமாறு அந்தப் பெண் கோரிக்கை வைக்கிறார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த டெலிவரி பாய், “பசுக்களுக்காகவே இதை ஆர்டர் செய்தீர்களா?” என்று கேட்க, அதற்கு அந்தப் பெண் மிகவும் உருக்கமாகப் பதிலளித்துள்ளார்.

 

அந்தப் பெண் தினமும் வீட்டில் மூன்று கூடுதல் ரொட்டிகளைச் செய்து அந்தப் பசுக்களுக்குத் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், அன்று அவசர வேலை காரணமாக அவர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், பசுக்கள் பசியோடு காத்திருக்குமே என்று கவலைப்பட்டுள்ளார். தனது அன்றாட பழக்கம் தவறிவிடக் கூடாது என்பதற்காகவே சோமாட்டோவில்ஆர்டர் செய்து, அதைத் டெலிவரி பாய் மூலமாக வழங்க நினைத்துள்ளார். அந்தப் பெண்ணின் இந்த உன்னதமான அன்பைப் பார்த்து நெகிழ்ந்துபோன டெலிவரி பாய், தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து அந்த ஆர்டருக்கான கட்டணத்தைச் செலுத்தியதுடன், தன் கைகளாலேயே அந்தப் பசுக்களுக்கு ஆசையாக  ஊட்டி விட்டுள்ளார்.

இந்த அழகான நெகிழ்ச்சிச் சம்பவம் இன்ஸ்டாகிராமில் “@themk09rider” என்ற பக்கத்தில் “சோமாட்டோ ஃபார் கவ்” என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ளது. இதைப் பார்த்த லட்சக்கணக்கான நெட்டிசன்கள், அந்தப் பெண்ணின் அளவற்ற அன்பையும், தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து அந்தப் பசுக்களுக்கு உணவளித்த டெலிவரி பாயின் பெருந்தன்மையையும் மனதாரப் பாராட்டி வருகின்றனர். “டெலிவரி செய்யச் சென்றவர், பசுக்களின் ஆசீர்வாதத்தோடு திரும்பி வந்துள்ளார்” என்றும், “நல்ல மனிதர்களின் நல்ல எண்ணங்களே இந்த உலகத்தை இன்னும் அழகாக வைத்திருக்கிறது” என்றும் இணையத்தில் கருத்துகள் குவிந்து வருகின்றன.