
அஜித் மற்றும் விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகரும் தொகுப்பாளருமான தாடி பாலாஜி. முதலில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் அதன்பிறகு சின்னத்திரையில் நுழைந்து பிறகு சினிமாவில் ஜொலித்தவர். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் தாடி பாலாஜி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். இப்படியான நிலையில் தாடி பாலாஜி நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்தார். விஜயின் முதல் மாநாட்டில் கூட அவர் பங்கு பெற்று இருந்தார்.
அதே சமயம் விஜயின் கட்சிக்காக பல வேலைகளை செய்து கொண்டிருக்கும் தாடி பாலாஜி சமீபத்தில் விஜயின் உருவப்படத்தை நெஞ்சில் பச்சை குத்தியபடி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து தாடி பாலாஜி சமீபத்தில் ஒரு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்த நிலையில் அது தொடர்பாகவும் பல விமர்சனங்கள் வந்தது. இப்படியான நிலையில் தைப்பூசம் திருநாளான இன்று தாடி பாலாஜி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், என்னை பற்றி விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நான் விஜய் கட்சியில் ஓடி ஓடி பணியாற்றிக் கொண்டிருக்க முக்கிய காரணம் எனக்கு பதவி தருவாங்க என்றோ அல்லது பொறுப்பு ஏதாவது கிடைக்கும் என்றோ நான் வேலை பார்க்கவில்லை. நான் அவருடைய தீவிர தொண்டன். எனக்காக விஜய் சார் நிறைய பண்ணி இருக்காரு. அதற்கு பலனாக நான் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கட்சியில் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கு நல்லாவே தெரியும் எனக்கு எந்த நேரத்துல என்ன செய்ய வேண்டும் எது கொடுத்தால் நான் இன்னும் ஓடுவேன் என்று விஜய்க்கு நன்றாகவே தெரியும். தேவையில்லாத விமர்சனங்களுக்கு எல்லாம் நான் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை என்று தாடி பாலாஜி பேசியுள்ளார்.