தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமான கருத்தைத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 18-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தக் கருத்தைத் தமிழக நிர்வாகிகளிடம் தெளிவாகத் தெரியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னணியில்தான், காங்கிரஸ் கட்சியின் தமிழகச் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று நேற்று (நவ. 20) உறுதிபடக் கூறியிருந்தார். இதன் மூலம், கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த காங்கிரஸ் – தவெக இடையேயான புதிய கூட்டணி அமைவதற்கான முயற்சிகள் குறித்த விவாதங்களுக்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.