தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், திமுகவை வீழ்த்தும் வல்லமை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமே உள்ளது என்று அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த நாஞ்சில் சம்பத், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தவெக தலைவர் விஜய்க்குத் திரளும் கூட்டத்தைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. கடந்த 39 ஆண்டுகளில் பல பொதுக்கூட்டங்களை நடத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன், இவ்வளவு பெரிய மக்கள் எழுச்சியை நான் பார்த்ததில்லை. விஜய்க்குத் தமிழகத்தில் கிடைத்து வரும் வரவேற்பும், வளர்ச்சியும் மாநில அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கும்.
75 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட திமுகவை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற அசாத்திய நம்பிக்கையோடு விஜய் களத்தில் நிற்கிறார். இதைக் கண்டு திமுக இன்று திகைத்துப் போய் நிற்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு, மாநிலம் சாம்பல் மேடாக மாறியுள்ளது. இதனை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஆளுமையும், ஆண்மையும் தற்போதுள்ள எதிர்க்கட்சிகள் இழந்துவிட்டன. ஆளும் திமுக அரசைத் துணிச்சலுடன் எதிர்க்கும் ஒரே கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே உருவெடுத்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தால், அவர் இதுவரை பெற்று வந்த செல்வாக்கை முழுமையாக இழந்துவிடுவார். வைகோ ஏற்கனவே திமுகவுடன் இணைந்துவிட்டார். ஆனால், ‘திமுகவுடன் இணைந்துள்ளோம், இனியும் இருப்போம்’ என்று காங்கிரஸ் கட்சி இதுவரை வெளிப்படையாகக் கூறவில்லை. வரும் மார்ச் 9-ஆம் தேதி திமுக திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்துகிறது. அன்று எங்கள் ‘அரசியல் குண்டு வெடிக்கும். ராகுல் காந்தியும், விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் திமுகவுக்கு மாரடைப்பு ஏற்படும்,” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
