தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழை முன்வைத்து, அவர் தனது மதத்தை மறைத்துத் தனித் தொகுதியில் போட்டியிட்டதாக பாஜக நாராயணன் திருப்பதி சுமத்தியுள்ள புகாரும், அதற்குத் திருமுருகன் காந்தி அளித்துள்ள பதிலடியும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தனது மகள் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்கி வருகிறார். இந்த அழைப்பிதழைக் குறிப்பிட்டு பாஜக மாநிலச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “செல்வப்பெருந்தகையின் மகள் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழில் உள்ள வாசகங்கள், அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினால், அவர் தனது இடஒதுக்கீடு உரிமையை இழக்கிறார் என்பது நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் தெளிவாகிறது.

 

தனது உண்மையான மதத்தை மறைத்து, தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது ஒரு மோசடிச் செயலாகும். எனவே, செல்வப்பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் இந்தப் புகாருக்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: செல்வப்பெருந்தகையின் மனைவி பெயர் ‘உமையாள்’. மகள் பெயர் ‘அக்ஷயா பிரியா’. இவை முறையே சைவ மற்றும் தமிழ் பெயர்கள். மணமகன் குடும்பத்தார் கிறிஸ்தவர்களாக இருப்பதால், அந்த முறைப்படி அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. மதம் மற்றும் சாதி கடந்த திருமணங்களை ஊக்கப்படுத்தும் பண்பையே இது காட்டுகிறது.

தன் மகளைத் திருமணம் செய்யப்போகும் குடும்பம் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தது என்பதற்காக, பெண் வீட்டார் மீது  மத முத்திரையைக் குத்துவது அறியாமையின் வெளிப்பாடு. சனாதனப் போக்கைக் கொண்டவர்கள் எப்போதும் சாதி, மதப் பாகுபாடுகளைத் தூண்டிப் பார்ப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்,” என்று திருமுருகன் காந்தி விமர்சித்துள்ளார்.

திருமண அழைப்பிதழை மையமாக வைத்துத் தனித் தொகுதி பிரதிநிதித்துவம் குறித்த சட்டப் போராட்டத்திற்கு பாஜக தயாராகி வரும் நிலையில், இது திட்டமிட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட புகார் என காங்கிரஸ் தரப்பு மறுப்புத் தெரிவித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.