
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அவர் ஆரம்பம் முதலே பாஜக மற்றும் திமுகவை விமர்சித்து வருகிறார். அதாவது திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் விஜய் அறிவித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியை அவர் பல விஷயங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று விஜய் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியான போது நடிகர் விஜய் பழைய பங்காளியான அதிமுகவை மீண்டும் பாஜக பகிரங்கமாக கைபிடித்தது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றி கழகத்தை இணைப்பது தொடர்பாக அடுத்த ஒரு வருடத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. மேலும் பாஜக மற்றும் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வரும் விஜய் பாஜக இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் எப்படி இணைவார் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் நயினார் நாகேந்திரனின் இந்த பதில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.