தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, முருகன் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன. இதில் பிரபல பின்னணிப் பாடகர் வேல்முருகன் பங்கேற்று, நடிகர் விஜய்யை வாழ்த்தி ஒரு பாடலைப் பாடினார். அவர் பாடி முடித்ததும் மேடை ஏறிய விஜய், அவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். அப்போது, பாடகர் வேல்முருகன் விஜய்க்கு ‘அறுபடை வீடு முருகன்’ திருவுருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

 

தொடர்ந்து, பாடகர் வேல்முருகன் தனது பாடலுக்கு விஜய் நடனமாட வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். எதிர்பாராத இந்த கோரிக்கையை புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட விஜய், உடனடியாக நடனமாடத் தயாரானார்.

“தளபதி.. தளபதி வாழ்க.. நம்ம வெற்றிக்கொடி எப்பவுமே வாழ்க” என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியதும், பாடகர் வேல்முருகன் மற்றும் ஒரு சிறுமியுடன் இணைந்து விஜய் உற்சாகமாக நடனமாடினார். இதைக் கண்ட தொண்டர்கள் உற்சாக மிகுதியால் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். விஜய்யுடன் இணைந்து அங்கிருந்த ஆண் மற்றும் பெண் தொண்டர்களும் மேடைக்குக் கீழே உற்சாகமாக நடனமாடியதால் பனையூர் அலுவலகமே திருவிழா கோலம் பூண்டிருந்தது.