விழுப்புரத்தில் நூலகக் கட்டிடத் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான ரவிக்குமார், வரும் 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக ஆட்சியில் பங்கு கேட்குமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர், “கட்சி தொடங்கிய நாள் முதல் விசிகவின் முழக்கமே ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதுதான். காலம் கனியும் போது நிச்சயமாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம்” என்று தெரிவித்தார். இருப்பினும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும், அந்தத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், கடந்த தேர்தலில் விசிக 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், 2026 தேர்தலில் இரட்டை இலக்கங்களில் (Double Digit) இடங்களைப் பெற திமுக ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் ரவிக்குமார் தெரிவித்தார்.
