மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது குறித்து பேச முதலமைச்சர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு விடுத்துள்ளார்..

தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்ததற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கக்கூடிய நிலையில், அது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக முதலமைச்சரை அழைத்துள்ளார். உச்சநீதிமன்றத்திலே கடந்த முறை நடந்த விசாரணையின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அழைத்துப் பேச வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசு சார்பில் தற்போது மிக்ஜாம் புயல் காரணமாக மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாகவும், மத்திய குழு ஆய்வில் இருக்கக்கூடிய காரணத்தினால் புயல் பணிகள் முடிந்த பின்னர் வருவதாக முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அழைப்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. காரணம் தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநருக்கு இடையே பல்வேறு விதமான முரண்கள் இருந்து வருகின்றது. குறிப்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பக்கூடிய பல மசோதாக்கள் இன்னும் நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் அவற்றை விரைவாக நிறைவேற்றி தர வேண்டும், கையொப்பம் மற்றும் ஒப்புதல் தர வேண்டும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தை  நாடி உள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், நீதிபதிகள் தமிழக ஆளுநர் உடைய இந்த விஷயத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தனர். அது மட்டுமல்லாமல் பல்வேறு அறிவுரைகளும் கொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தற்போது ஆளுநர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு எப்போது நடைபெற இருக்கின்றது? அந்த சந்திப்பில் யார் யாரெல்லாம் பங்கேற்க இருக்கிறார்கள் என்ற  விவரங்கள் வெளியாகவில்லை.