தமிழக அரசியலில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே சொல்லம்புகள் பாய்ந்து வரும் நிலையில், திமுக மூத்த தலைவர் RS பாரதி பேசிய மேடைப் பேச்சு பெரும் அரசியல் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சி சார்பில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், முதலமைச்சர் விஜய் விரைவில் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற தொனியில் மிகக் காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
முதலமைச்சருக்கு அளவுக்கு அதிகமான ‘வாய்க்கொழுப்பு’ இருப்பதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய RS பாரதி, திமுக பற்றிய 3 முக்கிய கோப்புகள் (Files) தன்னுடைய கைவசம் இருப்பதாகக் கூறி, அதை ஒவ்வொன்றாக அவிழ்க்கப் போவதாக விஜய் பேசியதற்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். “அவர் ஃபைல்களை அவிழ்க்கத் தயாரானால், நாங்களும் தவெக பற்றிய கோப்புகளை அவிழ்க்கத் தொடங்குவோம்” என RS பாரதி எச்சரித்துள்ளார்.
மேலும் தனது பேச்சின் போது கடந்த கால வரலாற்றுச் சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, டான்சி நிலத்தை வாங்கிய விவகாரத்தில் அளவுக்கு அதிகமாகப் பேசியதன் காரணமாகவே இறுதியில் சிறை செல்ல வேண்டிய சூழல் உருவானது” என்பதைக் குறிப்பிட்டார். அதே போன்றதொரு தவறைத் தற்போது CM விஜய்யும் செய்து வருவதாகவும், இந்த போக்கைத் தொடர்ந்தால் அவரும் ஜெயிலுக்குச் செல்வது உறுதி என்றும் RS பாரதி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
