நாட்டில் சுங்கச்சாவடிகள் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக பாஸ்ட் டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மின்னணு பாஸ்ட் டேக் முறை மூலம் வாகன ஓட்டிகளின் வங்கி கணக்கிலிருந்து சில நொடிகளில் பணம் வசூலிக்கப்படும். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நேரம் குறைகிறது. இந்த பாஸ்ட் டேக் முறை மூலம் கட்டணம் வசூலிப்பதில் சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பகம் பல முக்கிய விதிகளை கொண்டு வந்தது.

இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர்களை வாகன ஓட்டிகள் வாகனங்களில் ஒட்டாமல் கைவசம் வைத்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஸ்ட் டேக் ஸ்டிக்கர்களை ஒட்டாமல் கைவசம் வைத்துள்ள வாகன ஓட்டிகள் சில நேரங்களில் சுங்கச்சாவடியில் வேறு பாதை வழியாக கட்டணம் செலுத்தாமல் சென்று விடுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதன் காரணமாக வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டாத ஃபாஸ்ட் டேக்குகளை கருப்பு பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். இதற்காக பிரத்தியேக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கச்சாவடி நிர்வாகம் இது பற்றிய புகார்களை உடனடியாக அந்த மின்னஞ்சல் முகவரியில் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டாதவர்களை நிரந்தர தடுப்பு பட்டியலில் கொண்டு வந்து கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும். மேலும் இந்த நடவடிக்கையை தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தீவிர படுத்தியுள்ளது.