தற்போது நாட்டில் பட்ஜெட்டுக்கான நேரம் வந்து விட்டது. ஏனெனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்,.1 ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24-ஐ தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டையும் போன்று இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல துறைகள் சார்பாக அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக வரி செலுத்துவோருக்கு நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் அதிக கோரிக்கைகள் இருக்கிறது.

மத்திய அரசு வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிப்பதுடன், வருமானவரி அடுக்கிலும் மாற்றங்களை செய்யும் என சம்பள வர்க்கத்தினர் நம்பிக்கை கொண்டு உள்ளனர். அரசு இம்முறை வருமான வரி விலக்கு வரம்பை ரூபாய்.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தக்கூடும் என ஐஏஎன்எஸ் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை அரசாங்கம் செயல்படுத்தினால், சாமானியர்கள் கையில் தினமும் செலவுக்கு ரொக்கமாக அதிக பணம் கிடைக்கும்.

இது வருகிற காலங்களில் வாங்கும் திறனை ஊக்குவிக்கும். இதனால் பொருளாதார நிலையானது மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கையானது முதலீட்டையும் ஊக்குவிக்கும். இப்போது 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் அரசு வருமான வரி செலுத்தவேண்டியதில்லை. 60-80 வயது வரையுள்ள மூத்தகுடிமக்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு இந்த விலக்கு கிடைக்கும். 80 வயதுக்கு அதிகமான சூப்பர் சீனியர் குடிமக்களுக்கான விலக்கு வரம்பு ரூபாய்.5 லட்சமாகும் உயரக்கூடும்.