பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டில் பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. (BCA) இறுதி ஆண்டு படித்து வரும் 20 வயது மாணவி ஒருவர், குறைந்த வருகை பதிவைச் சார்ந்த பிரச்சினைக்காக கல்லூரி பேராசிரியர் சஞ்சீவ்குமார் மண்டல் (வயது 45) அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவர் அந்தக் கல்லூரியில் பேராசிரியராகவும், பி.சி.ஏ. பிரிவின் தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார். மாணவியின் வருகை பதிவு குறைவாக இருந்ததால், அதைப் பற்றி பேசுவதற்காகவும், “வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போ” எனக் கூறி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

மாணவி வீட்டிற்கு சென்றபோது, அங்கு குடும்பத்தினர் யாரும் இல்லாமல் சஞ்சீவ்குமார் மட்டும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலில் வீட்டுக்குள் செல்ல மாணவி தயங்கியபோதும், பேராசிரியர் கட்டாயப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர், வருகை பதிவை சரிசெய்து தருவதாகவும், அதற்காக “தான் சொல்லும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும்” எனக் கூறி மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த நேரத்தில் மாணவியின்  தோழி ஒருவர் செல்போனில் அழைத்ததால், அவசர அழைப்பு வந்ததாகக் கூறி மாணவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் சம்பவம் குறித்து பெற்றோர்களுக்கும், தோழிகளுக்கும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் திலக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேராசிரியர் சஞ்சீவ்குமார் மண்டலை கைது செய்துள்ளனர். மேலும் இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.