
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகள் அர்ச்சனா (23) பி.ஏ பட்டதாரி. இவர் அபிஷ்மோன் (27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது அர்ச்சனா 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல அர்ச்சனாவை கணவர் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியுள்ளார்.
இதற்கு மாமியார், மாமனார் மற்றும் நாத்தனார் ஆகியோரும் உடந்தை. இந்நிலையில் நேற்று முன்தினம் அர்ச்சனா வீட்டில் தூக்கில் தொங்கியதாகவும் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் அவரின் பெற்றோருக்கு கணவர் குடும்பத்தினர் தகவல் கொடுத்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சனாவின் பெற்றோர் உடனே மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு தன்னுடைய மகள் இறந்தது தெரியவந்தது. இதை பார்த்து அவர்கள் கதறி துடித்தனர்.
இது தொடர்பாக அர்ச்சனாவின் தந்தை திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையில் அர்ச்சனா இறப்பதற்கு முன்பாக தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கணவரும் அவர்களின் குடும்பத்தாரும் வரதட்சணை கேட்டு தன்னை மிகவும் துன்புறுத்துவதாகவும் கணவர் மது குடித்துவிட்டு தன்னை அடிப்பதாகவும் அர்ச்சனா கூறியுள்ளார். அவரைப் பெற்றோர் சமாதானப்படுத்தி கணவர் வீட்டுக்கு அனுப்பிய நிலையில் அப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.