கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் பல்வேறு பிரிவுகளில் வேலை பார்க்கும் சில பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து வேலையை விட்டு போக சொல்றாங்க.

வயசாயிருச்சு. இனி வேலைக்கு வேண்டாம் என்கிறார்கள். எந்த காரணமும் சொல்லாமல் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிக் கொண்டார்கள் என அழுது புலம்பினர். மேலும் ஒப்பந்த நிறுவனத்தின் மீதும் பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்.

அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார். இதுகுறித்து பெண் தொழிலாளர்கள் கூறியதாவது, அரசு மருத்துவமனையில் ஒப்பந்த நிறுவனம் மூலமாக நாங்கள் பணிபுரிகிறோம்.

இறந்து கிடக்கும் சடலங்கள் அபாயகரமான நோய் இருந்தாலும் அவர்களை தொட்டு தூக்கி உதவி செய்கிறோம். 10 வருடத்திற்கு மேலாக வேலை பார்க்கிறோம். இன்னும் இஎஸ்ஐ, பி.எப் தொகை பிடிக்காமல் உள்ளனர். தினக்கூலி 721 என கூறினாலும் சம்பளத்தை குறைவாக தான் கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாகியை மாற்றிவிட்டனர். புதிதாக வந்தவர் ரொம்ப டார்ச்சர் செய்கிறார். பல்லாயிரம் பேர் செய்ய வேண்டிய வேலையை 450 பேர் தான் செய்கிறோம். அதிக நேரம் வேலை பார்க்கிறோம். இருப்பினும் நீங்கள் போங்கள், நாங்கள் வேறு ஆட்களை வேலைக்கு எடுக்க போகிறோம் என சொல்லி மிரட்டுகிறார்கள்.

எங்கள் கம்பெனி நிர்வாகம் எங்கு இருக்கிறது என்பது தெரியாது. எப்போதாவது வந்து ஒப்பந்த நிறுவன அதிகாரி வந்து பேசி விட்டு செல்வார். நாங்கள் அரசாங்க வேலை கேட்கவில்லை. தினமும் சுத்தம் செய்கிற வேலை கூட செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளனர்.