இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் 23 வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மும்பை-கோவா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்படும் உணவு மோசமானதாக இருப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த ரயிலில் கொடுக்கப்பட்ட உணவில் நகம் கிடந்த சம்பவத்தை அடுத்து ஒப்பந்ததாரருக்கு ஐ.ஆர்.சி.டி.சி.நிறுவனம் ரூ.25,000 அபராதம் விதித்தது. மச்சிந்திரா பவார் என்ற பயணி மும்பையில் இருந்து வந்தே பாரத் ரயிலில் சென்றார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட உணவில் மனித நகம் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் டிவிட்டரில் புகார் தெரிவித்தார்.