ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடங்கப்படும்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு கூறி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்று  உச்ச நீதிமன்த்தில் நடைபெற இருக்கிறது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இபிஎஸ் தரப்பில் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் 100 பேர் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேப்போன்று ஓபிஎஸ் தரப்பில் 118 பேர் தேர்தல் பணிக்காக  நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக போட்டியிட்டால் தங்களின் ஆதரவு அவர்களுக்கு இருக்கும் என்றும், பாஜக போட்டியிடா விட்டால் தங்கள் தரப்பிலிருந்து வேட்பாளர் அறிவிக்கப்படவார் என்றும் ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். மேலும் இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் அதிக அளவில் நிலவுகிறது.