தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கு தேர்வானவர்களின் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 33 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. இதற்கு இணையதளம் மூலம் சுமார் 42 ஆயிரத்து 716 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் எழுத்து தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியான நிலையில் இவற்றில் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விதிகளின்படி சான்றிதழ் சரிபார்ப்புக்கு 51 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 14ஆம் தேதி நடத்தப்பட்ட நிலையில் பணிக்கு தற்காலிகமாக தேர்வான 33 பட்டதாரிகளின் விவரப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வர்கள் இறுதி கட்ட தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.