திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியார் காலனியைச் சேர்ந்த பியூலா (28) நேற்று காலை திருச்சி ரோடு உழவர் சந்தை அருகே உள்ள டீக்கடையில் உளுந்து வடைகள் வாங்கினார். தனது மகன் சஞ்சீவ் (4) மற்றும் தோழி அஸ்வதி (25) ஆகியோருடன் வீட்டிற்கு கொண்டு கொண்டே வடைகளை சட்னியுடன் சாப்பிட்டார். அவற்றில், ஒரு வடையின் உள்பகுதியில் இறந்த பூரான் இருந்ததை அவர்கள் கவனித்தனர். பூரான் இருந்ததை கண்ட உடன் அதனை சாப்பிடாமல் விட்டு விட்டனர். இதனால், மூவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தலைமையில் குழுவினர் அந்த டீக்கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, உணவுப் பொருள்கள் சுத்தமில்லாத முறையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. கடையின் சுகாதார நிலைமைக்கான குறைபாடுகள் மற்றும் சட்ட மீறல்களுக்காக, 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், டீக்கடைக்கு சீல் வைக்கப்பட்டு விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.