தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ளும் விதமாக ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மழை நீர் மற்றும் கழிவு நீர் வடிக்கால் கட்டமைப்புகள் சீராக உள்ளதை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சுகாதார வட்டம் மற்றும் வட்டாரங்களில் புயல் மற்றும் கனமழைக்கு முன்பாக விரைவு சிகிச்சை குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும். கொசுக்கள் மற்றும் பூச்சிக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.